உள்ளூர் செய்திகள்
பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி, மம்சாபுரம், வத்திராயிருப்பு, கொடிக்குளம், புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் ஆகிய பேரூராட்சி பகுதிகளில் வருகிற 19ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஒவ்வொரு பேரூராட்சிக்கும், நகராட்சிக்கும் தேர்தலை கண்காணிப்பதற்கு பறக்கும்படை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் மற்றும் பரிசு பொருட்களை யாரேனும் கொண்டு செல்கிறார்களா? என்று ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வியாபாரிகள் மற்றும் உணவுப்பொருட்கள்&இதர பொருட்கள் கொண்டு செல்பவர்களை நிறுத்தி சோதனை செய்கிறார்கள்.
வியாபாரிகளும், மொத்த வியாபாரிகளும், விற்பனை பிரதிநிதிகளும் உரிய ஆவணங்கள் இல்லாமல் உணவுப்பொருட்களையோ மற்ற பொருட்களையோ விற்பனை செய்தால் சோதனையில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம் மற்றும் பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.