உள்ளூர் செய்திகள்
கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆய்வு செய்த வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி மரக்கன்று நட்டார்.

பள்ளிகளில் கல்வி அதிகாரி ஆய்வு

Published On 2022-02-02 16:10 IST   |   Update On 2022-02-02 16:10:00 IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் பள்ளிகளில் வட்டார கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு நேற்று முதல் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டன. இந்த பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு முன்னேற்பாடுகளை வட்டாரக்கல்வி அலுவலர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கொரோனா தொற்று காரணமாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது. தற்போது தொற்றின் வேகம் குறைந்ததையடுத்து அரசு, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதன்படி பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நேற்று முதல் தொடங்க உத்தரவிட்டிருந்தது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்தில் 145 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும் அரசின் வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றி திறக்கப்பட்டது.

கொங்கலாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வட்டார கல்வி அலுவலர் மலர்கொடி கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின் பற்றப்படுகிறதா என்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்கள் வருகை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டார். 

முன்னதாக பள்ளிக்கு வந்த மாணவர்களை மேலாண்மைக்குழு தலைவி முத்துச்செல்வி, வட்டாரக்கல்வி அலுவலர் மலர்கொடி, தலைமை ஆசிரியை மேரி ஆகியோர் வரவேற்றனர். இதில் பட்டதாரி ஆசிரியர்கள் கார்த்திகேயன், ஜெயக்குமார், சுப்புலட்சுமி, இடைநிலை ஆசிரியை ஆனந்தவள்ளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News