உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்து தொடக்கம்

Published On 2022-02-02 14:13 IST   |   Update On 2022-02-02 14:13:00 IST
ஈரோடு மார்க்கெட்டுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மார்க்கெட்டுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கியுள்ளதால் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஈரோட்டில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் கட்டுப்பாட்டில் 2 மஞ்சள் மார்க்கெட்டுகளும், கூட்டுறவு சங்கம் கட்டுப்பாட்டில் 2 மஞ்சள் மார்க்கெட்களும் செயல்பட்டு வருகின்றது. இது தவிர சேலம் கூட்டுறவு சங்கம் சார்பில் தனியாக ஒரு மஞ்சள் மார்க்கெட் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சரிவில் இருந்து வந்த மஞ்சள் விலையானது கடந்தாண்டு மெல்ல உயர்ந்து குவிண்டால் ரூ.9 ஆயிரம் வரை விற்பனையாகி வருகின்றது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மஞ்சள் அறுவடை செய்யும் பணி தொடங்கி உள்ளது.

இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட மஞ்சள் பாலீஸ் செய்யப்பட்டு மார்க்கெட்டுகளுக்கு விவசாயிகள் விற்பனைக்கு கொண்டுவரத்தொடங்கி உள்ளனர். ஈரோடு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு நேற்று முதல் புது மஞ்சள் வரத்து தொடங்கியதையடுத்து ஒரு குவிண்டால் புது மஞ்சள் ரூ.7029 முதல் ரூ.8569 வரையிலும், கிழங்கு குவிண்டால் ரூ.6859 முதல் ரூ.8331 வரையிலும் விற்பனையானதாக வியாபாரிகள் கூறினர்.

வழக்கமாக மார்க்கெட்டுகளுக்கு புது மஞ்சள் வரத்து தொடங்கினால் பழைய மஞ்சள் விலையானது சற்று குறையத்தொடங்குவது வாடிக்கையாகும். ஆனால் இந்தாண்டு பழைய மஞ்சள் விலையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்றும், வரும் நாட்களில் முழு அளவில் புதிய மஞ்சள் வரத்து இருக்கும் பட்சத்தில் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.

Similar News