உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோடு மாவட்டத்தில் 25.87 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2022-02-02 13:50 IST   |   Update On 2022-02-02 13:50:00 IST
ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.87 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 25.87 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது. முன் களப்பணியாளர்கள், குழந்தைகள் வாலிபர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 

இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது. 2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட வர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் விரைவாக குணம் அடைந்தனர். இந்நிலையில் மாவட்டத்தில் 3-ம் அலையில் மீண்டும்  கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டி வந்தது. இதைத்தொடர்ந்து முதலில் 2ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4ஆயிரமாக உயர்ந்தது.

அதன் பின்னர் 4,800 ஆக அதிகரித்தது. இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 25லட்சத்து 87 ஆயிரத்து 727 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Similar News