உள்ளூர் செய்திகள்
ஆறு சரவண தேவர்

பள்ளிக்கூடங்களை திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

Published On 2022-02-01 09:28 GMT   |   Update On 2022-02-01 09:28 GMT
பள்ளிக்கூடங்கள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முக்குலத்து புலிகள் கட்சி நிறுவன தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:

முக்குலத்துப்புலிகள் கட்சியின் நிறுவன தலைவர் ஆறு.சரவணத்தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் டெல்டா வைரஸ் கொரோனா, ஒமிக்ரான் இணைந்து சமூகப் பரவலாக தொடங்கி உள்ளதாக கடந்த மாதம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். 

அதன் பிறகு தொடர்ச்சியாக இரவு நேர ஊரடங்கு போடப்பட்டது. பிறகு ஞாயிறு முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. டாஸ்மாக் மட்டும் தவிர்த்து வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி மறுப்பு செய்யப்பட்டது.

இப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்படுகிறது. 1-ம் வகுப்பு முதல் அனைத்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகிறது. 

இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும். அன்றாடம் 27 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிக்கும் போது ஏன் ஊரடங்கு தளர்த்தி பள்ளிகள் திறக்க வேண்டும்?

தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் ஊரடங்கு போட மாட்டோம் என்பதை அரசு உத்தரவாதம் அளிக்குமா? பள்ளி மாணவர்களுக்கு 15 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

அதுவும் 2 டோஸ் போட வில்லை. எந்த அடிப்படையில் கொரோனாவால் 
மூடி இருந்த பள்ளிக்கூடங்களை இப்போது ஒன்றாம் வகுப்பு முதல் திறக்கப்படுகிறது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் தெளிவு படுத்த வேண்டும்.

பள்ளி திறப்பதால் எந்த பாதிப்பும் வராது, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார்களா? தேர்தல் அரசியலுக்காக மாணவர்கள் 
நலனை பாதிக்க கூடாது. 

பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News