ராஜபாளையத்தில் இன்று அதிகாலை மரக்கடைக்குள் புகுந்த லாரி- தொழிலாளி பலி
ராஜபாளையம்:
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மெயின் ரோட்டில் பி.எஸ்.கே. பார்க் அருகே மரக்கடை உள்ளது. இங்கு தொழிலாளியாக வேலை பார்ப்பவர் மாரிமுத்து (வயது 37). அதே பகுதியை சேர்ந்த இவர் இரவில் மரக்கடை முன்பு உறங்குவது வழக்கம்.
நேற்று இரவு வழக்கம் போல் கடையை அடைத்ததும் மாரிமுத்து அங்கேயே படுத்துக் கொண்டார். இந்த நிலையில் இன்று அதிகாலை இந்த சாலையில் வேகமாக வந்த லாரி திடீரென நிலைதடுமாறி மரக்கடைக்குள் கண்ணி மைக்கும் நேரத்தில் புகுந்தது.
இந்த விபத்தில் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் ராஜபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமகிருஷ்ணன் மற்றும் ராஜபாளையம் தெற்கு போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையில் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது தான் லாரியின் அடியில் மாரி முத்து நசுங்கி பலியாகி இருப்பது தெரியவந்தது. அவரது உடலை தீயணைப்பு படையினர் மீட்டனர். இதற்கிடையில் லாரி டிரைவர் காமராஜ் பலத்த காயங்களுடன் இருக்கையிலேயே இடிபாடுகளுக்குள் சிக்கி கிடப்பது தெரியவந்தது.
தீயணைப்பு படையினர் வெல்டிங் கட்டர் வரவழைத்து லாரியின் பாகங்களை வெட்டி எடுத்த பிறகே அவரை மீட்க முடிந்தது. உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜ் சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை சேர்ந்த காமராஜ் தென்காசியில் இருந்து இரும்பு கம்பி பாரம் ஏற்றிக்கொண்டு மதுரைக்கு புறப்பட்டுள்ளார். ஆனால் ராஜபாளையம் வந்த போது லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மரக்கடைக்குள் புகுந்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் பலியான மாரிமுத்துக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். அதிகாலையில் நடந்த இந்த விபத்து ராஜபாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.