உள்ளூர் செய்திகள்
ஜெயங்கொண்டம் பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை
ஜெயங்கொண்டம் பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்
அரியலூர்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வரதராஜன்பேட்டை பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வாகனங்களில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்ல படுகிறதா? என்பதை கண்டறிய வாகன சோதனையிட, சுழற்சி முறையில் தலா ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 தேர்தல் பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 தேர்தல் பறக்கும் படையினர் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள் 6 குழுக்களாக பிரிக்கப்பட்டு இருபத்தி நான்கு மணி நேரமும் தீவிர வாகன சோதனையில் ஈடு பட்டு வருகின்றனர்.
ஜெயங்கொண்டம் நகராட்சி மற்றும் வரதராஜன் பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாகனங்களில் கட்சி கொடி கட்டி வந்தவர்களிடம் கட்சி கொடிகள் அகற்றப்பட்டு வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் அனுப்பி வைக்கப்பட்டது.
அதேபோல் இரு சக்கர வாகனங்களில் வருபவர்களையும் இடையில் வழிமறித்து அவர்களையும் சோதனையிட்ட பின்னரே திருப்பி அனுப்பப்படுகிறது.
இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் கூறும்போது தாங்கள் கொண்டு வரும் (ரொக்கம்) பணங்களுக்கு உரிய ஆவணங்களை கையில் வைத்திருக்க வேண்டும்.
ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்படும் தொகைகள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும். பின்னர் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்றுக் கொள்ள வேண்டும் தேர்தல் விதிமுறைகளை பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் கட்டாயம் மதித்து அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.