உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா மற்றும் இந்து முன்னணியினர்.

மதுரையில் மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது

Published On 2022-01-31 17:05 IST   |   Update On 2022-01-31 17:05:00 IST
மதுரையில் பாரதீய ஜனதா நிர்வாகிகள் மீது வழக்கு பதியப்பட்டதை கண்டித்து மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை

மதுரை மேல பெருமாள் மேஸ்திரி வீதியில்   கிறிஸ்தவ ஏ.ஜி. சபை இயங்கி வருகிறது.  நேற்று பிரவீன்ராஜ்குமார் உள்பட பலர் இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்தி  கொண்டிருந்தனர். 

அங்கு வந்த  சிலர் சேர்களை தூக்கி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து பிரவீன் ராஜ்குமார் தெற்குவாசல் போலீசில் புகார் செய்தார். 

போலீசார் வழக்குப்பதிவு செய்து, பா.ஜனதாவை சேர்ந்த ராஜகண்ணன், பாலசுப்பிரமணியன், சுபாநாகலூ, ஆதிசேஷன், இந்து முன்னணி அரசு பாண்டி மற்றும் சிலர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் பா.ஜனதா நிர்வாகிகளில் சிலர் இன்று அதிகாலை திடீரென்று கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்து பா.ஜனதா மற்றும் இந்து அமைப்பினர் வில்லாபுரம் ஆர்ச் அருகே இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  மறியலில் ஈடுபட்ட பா.ஜனதா நிர்வாகிகள் உள்பட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்து  வேனில் ஏற்றி  சென்றனர்.

Similar News