உள்ளூர் செய்திகள்
பேரூர் படித்துறையில் திரண்டு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

இன்று தை அமாவாசை: பேரூர் படித்துறையில் திரண்டு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்

Published On 2022-01-31 15:46 IST   |   Update On 2022-01-31 15:46:00 IST
முன்னோர்களுக்கு திதி கொடுக்க பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பக்தர்கள் குவிந்தனர்.
கோவை:

இந்துக்களின் முக்கிய விசேஷ நாட்களில் தை அமாவாசையும் ஒன்று. இந்த நாளில் பக்தர்கள் ஆறு, கடல், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். 

அதேபோல இன்று தை அமாவாசையான இன்று புனித தலங்களில் பக்தர்கள் திரண்டு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். கோவை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 

அவர்கள் அங்கு தயாராக இருந்த புரோகிதர்களை கொண்டு தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.  வாழை இலையில் அரிசி, பூ, தர்ப்பை புல், எள் உள்ளிட்டவற்றை படைத்து புரோகிதர்கள்  பூஜை செய்தனர். அவற்றின் முன்பு அமர்ந்து பக்தர்கள் தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். 

பின்னர் அவற்றை தலையில் சுமந்து சென்று ஆற்று நீரில் போட்டு தர்ப்பணம் கொடுத்தனர். பின்னர் சூரிய பகவானை நோக்கி வழி பட்டனர். அகத்திக்கீரை வாங்கி அந்த பகுதியில் நின்று பசுக்களுக்கு வழங் கினர். மேலும் அன்ன தானமும் கொடுத்தனர். 

தொடர்ந்து அவர்கள் பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டனர். இதன் காரணமாக கோவிலிலும், ஆற்றங்கரையிலும் ஏராள மான பக்தர்களை காண முடிந்தது. பேரூர் கோவில் உதவி ஆணையாளர் விமலா, கூறுகையில் தை அமாவாசையை முன்னிட்டு பட்டீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழக்கம் போல் வழிபடலாம். கொரோனா தொற்று காலம் என்பதால் ஆற்றங்கரையில் பக்தர்கள் கூடி தர்ப்பணம் கொடுக்க அனுமதி இல்லை என தெரிவித்து இருந்தார். 

ஆனால் இன்று காலை ஆற்றங்கரைக்கு சென்ற பக்தர்களை யாரும் தடுக்கவில்லை. இதைத்தொடர்ந்து பக்தர்கள் திரண்டு பலிகர்ம பூஜை செய்தனர். பக்தர்கள் குவிந்ததால் ஆற்றங்கரை மற்றும் கோவில் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இதேபோல ஆலைமலை அருகே உள்ள அம்பராம் பாளையம் ஆற்றுப்படுகை யிலும் இன்று ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் முன்னோர்களை நினைத்து திதி கொடுத்தனர். பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அங்கு குவிந்திருந்தனர். 

Similar News