உள்ளூர் செய்திகள்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த காய்ச்சல் முகாம்கள்
4 -வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 49 எருக்காடு, வார்டு எண் 54 பாரதிநகர் ஆகிய இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்த நிலையில் தற்போது மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. நேற்று மாவட்டத்தில் 1,497 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,20,539 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 11,862 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 1,027பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதையடுத்து கொரோனா தொற்றால் தற்போது வரையில் 1,07,906 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சையில் இருந்த 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து இறப்பு எண்ணிக்கை 1,040 ஆக அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் திருப்பூர் நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 7 ஸ்ரீ நகர் ,வார்டு எண் 13 ஸ்ரீவித்யா நகர், 2 வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 20 நேரு நகர் , வார்டு எண் 22 கொடிக்கம்பம் ஆகிய பகுதிகளில் இந்த முகாம் நடைபெற்றது.
அதேபோன்று 3-வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 38 பொன்முத்து நகர், வார்டு எண் 43க்கு உட்பட்ட பெரியதோட்டம் பள்ளிவாசல் பகுதி, 4 -வது மண்டலத்துக்கு உட்பட்ட வார்டு எண் 49 எருக்காடு, வார்டு எண் 54 பாரதிநகர் ஆகிய இடங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன.
இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர்.