உள்ளூர் செய்திகள்
ஒற்றை யானை

ஒகேனக்கல் அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை-கிராம மக்கள் பீதி

Published On 2022-01-31 11:27 IST   |   Update On 2022-01-31 11:27:00 IST
அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் நேற்று இரவு அந்த ஒற்றையானை ஆக்ரோ‌ஷத்துடன் சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை விரட்டியுள்ளது.

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அருகே சிததாண்டபுரம், எ.புதூர், கேரட்டி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. அந்த ஒற்றை யானை வனத்துறையினர் கிராம மக்களும் தாரை, தப்பட்டை அடித்தும் அதிக ஒலி எழுப்பும் விரட்டி வந்தனர்.

இந்த நிலையில் அஞ்செட்டி அருகே சித்தாந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது70). விவசாயியான இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காட்டு பகுதியில் ஆடு மேய்க்க சென்ற போது ஒற்றை யானை தாக்கி உயிரிழந்தார்.

இந்த ஒற்றை யானை இரவு முழுவதும் மற்றும் பகலிலும் அருகில் உள்ள கேரட்டி, சித்தாந்த புரம், புதூர், சிவலிங்கபுரம் ஆகிய பகுதிகளில் பிளிறியபடி சாலைகளில் சுற்றித் திரிவதால் கிராம மக்கள் வீடுகளை விட்டு வெளியே வராமல் முடங்கி கிடந்தனர்.

மேலும் அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலையில் நேற்று இரவு அந்த ஒற்றையானை ஆக்ரோ‌ஷத்துடன் சாலை நடுவே நின்று கொண்டு வாகனங்களை விரட்டியுள்ளது. இதனால் பீதியடைந்து வாகனங்களை திருப்பிக்கொண்டு வந்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகளும் அந்த சாலையில் செல்ல அச்சமடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஒரு குழுவாக சென்று ஆக்ரோ‌ஷத்துடன் சுற்றித் திரிந்த ஒற்றை யானையை தாரை, தப்பட்டை அடைத்தும் பட்டாசுகள் வெடித்தும் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து பெருமூச்சு விட்டனர். அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் நிம்மதி அடைந்தனர். மேலும் அப்பகுதியில் வனத்துறையினர் முகாமிட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடகா வனப் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. கோடை காலத்தில் தண்ணீர் உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம். தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீர் தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக் கோட்டை, ஓசூர், சானமாவு வனப் பகுதியில் சுற்றித் திரிகின்றன.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் காவிரியின் எதிர் கரையான மாறுக்கொட்டாய் வனப்பகுதியில் இருந்து பிரிந்த ஒற்றை யானை நேற்றிரவு காவிரி ஆற்றை நீந்தி கடந்து ஊட்டமலை கிராமத்துக்குள் புகுந்தது. அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் ஒற்றை யானையை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர். அப்போது ஒற்றை யானை மீண்டும் ஆற்றில் நீந்தியபடி ஆற்றை கடந்து கர்நாடக வனப் பகுதிக்குள் புகுந்தது. ஆற்றைக் கடந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை யானையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News