உள்ளூர் செய்திகள்
சிவகாசி சிவன் கோவிலில் அன்னதான கூடம் அமைக்க கோரிக்கை
சிவகாசி சிவன் கோவிலில் அன்னதான கூடம் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசி
சிவகாசியில் பிரசித்திபெற்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு காசிவிஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் அருள் பாலிக்கின்றனர்.
சிவகாசியின் மையப்பகுதியில் சிவன் கோவில் அமைந்துள்ளதால் தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் தமிழக அரசின் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இங்கு தினமும் 100 பேருக்கு மதியம் 12 மணி வரை இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. மேலும் அடிக்கடி சமபந்தி நடைபெற்று வருகிறது.
இதனால் கோவிலின் பிரதான நுழைவாயிலில் பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்வதில் சிரமப்பட வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு புனரமைப்பு பணி நடைபெற்று, சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதன் பின்னர் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. சிவன் கோவில் தெற்கு பகுதியில் உள்ள காலி இடத்தில் அன்னதான கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை அன்னதானக்கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் அவதிப்படுகின்றனர். அறநிலையத்துறையினர் உடனடியாக இந்த கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.