உள்ளூர் செய்திகள்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மார்ச் 15-ந்தேதி கண்டன ஆர்ப்பாட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அரசு ஊழியர் சங்கத்தினர் கூறியுள்ளனர்.
நாகப்பட்டினம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு நாகப்பட்டினம் அரசு ஊழியர் சங்க கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவர் ராணி தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம், கீழ்வேளூர் மற்றும் வேதாரண்யம் ஆகிய மூன்று வட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர் அ.தி.அன்பழகன் வேலை அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் மாநிலச் செயற்குழு நடவடிக்கைகள் மற்றும் முடிவுகள் குறித்து எடுத்துரைத்தார்.
மாநில முடிவின்படி நாகை கலெக்டர் அலுவலக வளாகம், நீதிமன்ற வளாகம் மற்றும் அரசு மருத்துவக கல்லூரி ஆகியவற்றில் வளாக கிளைகள் ஏற்படுத்துவது.
ஊரக வளர்ச்சித்துறை மகளிர் திட்டத்தில் உதவி திட்ட அலுவலர்களாக பணிபுரிபவர்களுக்கு, ஒப்பந்த நீட்டிப்பு செய்யவில்லை.
இதே நிலை ஏனைய மாவட்டங்களில் இருக்கும்போது, அங்கெல்லாம் ஊதியம்
வழங்கப்பட்டு விட்டது என்பது தெரிந்தும், நாகப்பட்டினம் மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட திட்ட இயக்குநரை நேரில் சந்தித்து பேசியும், உதவித் திட்ட அலுவலர்கள் 3 பேருக்கு பணிசெய்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை 4 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படாமல் இருப்பதற்கு கண்டனத்தை தெரிவிப்பது.
மாநில மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் கலெக்டர் உடனடியாக தலையிட்டு உதவி திட்ட அலுவலர்கள் அனைவருக்கும் பணி செய்த நாட்களுக்கு உரிய ஊதியத்தை வழங்க வேண்டும்.
தவறும்பட்சத்தில் மார்ச் 15-ந்தேதி நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
மாநிலச் செயலாளர் டேனியல் ஜெயசிங் சிறப்புரையாற்றினார். மாவட்ட மகளிர் துணைக்குழு அமைப்பாளர் சித்திரா நன்றி கூறினார்.