உள்ளூர் செய்திகள்
சிவகாசி மாநகராட்சியில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கீடு
சிவகாசி மாநகராட்சியில் 21 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளன.
சிவகாசி
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. வருகிற 4-ந்தேதி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட ஆயத்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு நடைபெறும் முதல் தேர்தலாகும். மாநகராட்சி பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 48 வார்டுகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியானது.
சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என நீண்ட வருடங்களாக பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் ஆளுங்கட்சியான தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக உள்ளன.
சிவகாசி மாநகராட்சியின் முதல் மேயர் பெண் என்பதால் பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது. சிவகாசி மாநகராட்சியில் 48 வார்டுகளில் 7 வார்டுகள் எஸ்.சி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு எண் 16, 17, 20, 21 எஸ்.சி. பெண்களுக்கும், வார்டு எண் 23, 24, 46, எஸ்.டி. பெண் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. வார்டு எண் 4, 5, 6, 10, 13, 16, 19, 22, 25, 36, 38, 40, 43 ஆகியவை பொதுப்பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.