உள்ளூர் செய்திகள்
சிவகாசியில் கார் டிரைவர் மர்மமான முறையில் இறந்துள்ளார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி(வயது 50), கார் டிரைவர். இவரது மனைவி பாண்டிசெல்வி (36). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
கருப்பசாமிக்கு சொந்தமாக தேவர்குளத்தில் வீடு உள்ளது. 8 வருடங்களுக்கு முன்பு இந்த வீட்டு பத்தி ரத்தை வைத்து தங்கபூபதி என்பவரிடம் ரூ.26 லட்சம் கடன் வாங்கியிருந்தனர்.
இந்த நிலையில் சிவகாசி ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த தாமோதரன் என்பவர் அந்த வீட்டை தான் வாங்கி விட்டதாககூறி கருப்பசாமி, அவரது மனைவி பாண்டிசெல்வி ஆகியோரிடம் தொடர்ந்து பிரச்சினை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு ஆட்டோவில் திடீர் உடல்நலக்குறைவுடன் வந்த கருப்பசாமியை குடும்பத்தினர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் கருப்பசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கருப்பசாமியின் திடீர் சாவு மனைவி மற்றும் அவர்களது குடும்பத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து அவரது மனைவி பாண்டிசெல்வி திருத்தங்கல் போலீசில் புகார் செய்துள்ளார். அதில், வீடு விவகாரம் தொடர்பாக தாமோதரன் எங்களிடம் அடிக்கடி பிரச்சினை செய்து வந்தார்.
நேற்று மாலை எனது கணவர் பெட்ரோல் போடுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். சிறிது நேரத்தில் அவர் என்னிடம் செல்போனில் பேசினார். அப்போது தாமோதரன் உள்பட 3 பேர் தன்னிடம் வந்து பிரச்சினை செய்து என்னை தள்ளி விட்டதாகவும், இதனால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார்.
மேலும் சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகில் நிற்பதாகவும் தன்னை அழைத்துச்செல்ல வருமாறும் கூறினார். இதையடுத்து நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது எனது கணவர் (கருப்பசாமி) இல்லை.
இதற்கிடையே ஆட்டோவில் மயக்க நிலையில் வீட்டுக்கு வந்த கணவரை அவசரமாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
எனது கணவர் சாவில் மர்மம் உள்ளது. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி உரியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.