உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் அருகே புதிய தார்சாலை பணிக்கு ஆங்கிலேய பெண்கள் எதிர்ப்பு
கொடைக்கானல் அருகே புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை ஆங்கிலேயே பெண்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் அருகே உள்ள வில்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட பேத்துப்பாறை வயல் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணியை தொடங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து ஊராட்சி அதிகாரிகள் புதிய பணிக்கான பூமி பூஜையை நடத்தினர். இது குறித்து அறிந்ததும் அங்கு பல ஆண்டுகளாக வசித்து வரும் ஆங்கிலேயே பெண்கள் அப்பணியை தடுத்து நிறுத்துமாறு கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். புதிதாக சாலை அமைப்பதால் உங்களுக்கு சொந்தமான இடம் பாதிக்கப்படாது என்று உறுதியளித்தனர்.
இதனைத் தொடர்ந்து நீண்ட நேரமாக அவர்களிடம் சமாதானம் பேசி பூமி பூஜை பணியை நடத்தினர். இச்சம்பவத்தால் பேத்துப்பாறை வயல் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.