உள்ளூர் செய்திகள்
கோபு படம்

அனுமதியின்றி மது விற்ற 24 பேர் கைது

Published On 2022-01-27 09:21 GMT   |   Update On 2022-01-27 09:21 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 775 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில்:

குடியரசு தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தது. 
இதையடுத்து அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணனுக்கு புகார்கள் வந்தது. 

மாவட்டம் முழுவதும் சோதனை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார். இதையடுத்து திருவட்டாறு அருகே சித்திரங்கோடு பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அங்கு மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த சுரேந்திரன் (வயது 58) என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த 112 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோட்டார் வட்டவிளை பகுதியில் அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக சப்- இன்ஸ்பெக்டர் சரவண குமாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையிலான போலீசார் அங்கு சென்றனர். 

அங்கு நின்று கொண்டிருந்த வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த அன்பரசு (48) என்பவரை பிடித்து சோதனை செய்த போது அவரிடம் மதுபாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 60 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். 

வடசேரி சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன் தலைமையிலான போலீசார் பள்ளிவிளை பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு மது விற்றுக்கொண்டிருந்த வெட்டூர்ணிமடம் கேசவ திருப்பாபுரத்தைச் சேர்ந்த ஏசு பால்  (70) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மது விற்றதாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 775 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News