உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

சிறைத் துறை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல்- வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் வசூல் வேட்டை?

Published On 2022-01-26 09:26 GMT   |   Update On 2022-01-26 09:26 GMT
வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வேலூர்:

வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்த தாகவும். வெளியாட்கள் ஜெயிலுக்குள் சென்று வந்ததாகவும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது.அதன்பேரில் விசாரணை நடத்த கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முக சுந்தரத்திற்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஜெயிலுக்குள் சம்பந்தம் இல்லாமல் வெளி ஆட்கள் யாராவது உள்ளே வந்தார்களா? குடியிருப்பு ஒதுக்கீட்டில் அதிகாரிகள் தலையீடு மற்றும் பாரபட்சம் உள்ளதா? முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா? என விசாரணை நடத்தினார்.

பிறகு ஜெயிலுக்கு சென்று அங்கு பணியில் இருந்த சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

ஜெயிலில் பணியாற்றும் 70 பேரிடம் விசாரணை நடத்தினார்.ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் ஜெயிலுக்கு சென்று அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் தொழிற் பயிற்சிகளை பார்வையிட்டார்.அப்போது வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் உடனிருந்தார்.

ஆண்கள் ஜெயிலுக்கு எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான கவாத்து மைதானம் உள்ளது. இதன் அருகே உதவி ஜெயிலர்களின் அலுவலக அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையை வெளிநபர் ஒருவர் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.

தொடர்ந்து டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் அந்த அறையை சோதனையிட்டனர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் இருந்தது. அதனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை.

இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த உத்தர விட்டனர்.

ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பணம் கைப்பற்றப்பட்ட அறையை பயன்படுத்தியது யார்? பணம் எப்படி வந்தது. முறைகேடாக வசூலிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணை அடிப்படையில் வேலூர் ஜெயிலில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள், இடமாற்றங்கள் இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News