உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடிவடிக்கை கோரி தாய் கலெக்டரிடம் மனு

Published On 2022-01-26 06:20 GMT   |   Update On 2022-01-26 06:20 GMT
மகன் மீது பொய் வழக்கு பதிவு செய்த போலீசார் மீது நடிவடிக்கை கோரி தாய் கலெக்டரிடம் மனு கொடுத்தார்
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் கிராமத்தை சேர்ந்தவர் சித்ரா,   இவர் தனது மகன் மீது பொய் வழக்குப் பதிவு செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி,  பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.

பின்னர் சித்ரா கூறியதாவது:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், காரியானூர் கிராமத்தில் எனது கணவர் செந்திலுடன் விவசாயம் செய்து பிழைத்து வருகிறோம். எங்கள் மகன் திவாகர் (21) என்பவரை, கடந்த 23&ந் தேதி கை.களத்தூர் போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
 
குறவர் சமூகத்தைச் சேர்ந்தவரான திவாகரை, கை. களத்தூர் போலீசார் அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரின் தூண்டுதலின் பேரில் பொய் வழக்கில் கைது செய்து, எங்களது வீட்டிலிருந்த 23 பவுன் நகை மற்றும் ரூ.85 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காரியானூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளை ஒத்துக்கொள்ளுமாறு எனது மகனை துன்புறுத்தி வாக்குமூலமும் வாங்கியுள்ளனர்.

திவாகர் மீது பதிவு செய்யப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். எங்களிடமிருந்து பறிமுதல் செய்த நகை, ரொக்கம் ஆகியவற்றை போலீசார் திருப்பி ஒப்படைக்க வேண்டும். காரியானூர் கிராமத்தில் நடைபெறும் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகளை போலீசார் தேடி கண்டுபிடிக்க வேண்டும். மேலும், எனது மகன் மீது பொய் வழக்குப் பதிந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

காவல்கார குறிஞ்சியர் நலச்சங்க மாநிலத் தலைவர் ஆர். பொன்னுவேல் தலைமையில், அச்சங்கத்தின் நிர்வாகிகள் பலர் மாவட்ட கலெக்டர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
Tags:    

Similar News