உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் - நகரி ரெயில் பாதை அமையும் இடத்தில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ஆய்வு
சோளிங்கரில் திண்டிவனம் & நகரி ரெயில் பாதை அமையும் இடத்தில் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் ஆய்வு செய்தார்.
சோளிங்கர்:
திண்டிவனம் - ஆந்திர மாநிலத்தின் நகரி இடையே புதிய அகல ரெயில் பாதை திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி பெறவும் ஏழை எளிமக்கள், விவசாய மக்கள் ரெயில் வசதி பெறும் வகையிலும், 2006-இல் அப்போதைய அரக்கோணம் தொகுதி எம்.பி.யும், ரெயில்வே இணை அமைச்சருமான ஆர்.வேலுவின் முயற்சியால், திண்டிவனம் - நகரி ரெயில் பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த புதிய ரெயில் பாதை திண்டிவனத்தில் துவங்கி ஆந்திர மாநிலத்தின் நகரியைச் சென்றடையும்.
இந்த ரெயில் அகலப்பதை திண்டிவனம் - நகரி இடையே 184 கி.மீ. தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கும் திட்டம் சுமார் ரூ.498 கோடியில் செயல்படுத்தப்படும் என்று 2006-இல் அப்போதைய மத்திய காங்கிரஸ் அரசு அறிவித்தது. அப்போது 2006 ல் சோளிங்கர் தக்கான்குளம் அருகே அதற்கான திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
திண்டிவனம் - நகரி ரயில் பாதையில் திண்டிவனம், வெள்ளிமேடுபேட்டை, தெள்ளாறு, வந்தவாசி, மாம்பாக்கம், எருமைவெட்டி, செய்யாறு, இருங்கூர், மாமண்டூர், ஆரணி, தாமரைப்பாக்கம், திமிரி, ஆற்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா சாலை சந்திப்பு, கொடைக்கல், சோளிங்கர், ஆர்.கே.பேட்டை, அத்திமஞ்சூரிப்பேட்டை, பள்ளிபட்டு, பட்டூர்பேட்டை, நகரி ஆகிய ரயில் நிலையங்கள் அமையவுள்ளது எனவும்.
மேலும், இந்த ரெயில் பாதையில் 12 பெரிய பாலங்கள், 114 சிறிய பாலங்கள், 66 கடவுப் பாதைகள், 11 மேம்பாலங்கள், 30 தரை வழிப் பாலங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் இத்திட்டம் சில காரணங்களால் கடந்த 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டது. திண்டிவனம்& நகரி அகல ரெயில் பாதை விரைந்து அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று சோளிங்கர் அடுத்த கீழாண்டை மோட்டூர் வழியாக திண்டிவனம்-நகரி இடையே புதிதாக அகல ரெயில் பாதை அமைக்கும் இடத்தை ராணிப்பேட்டை ஆர்.டி.ஓ பூங்கொடி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது நில எடுப்பு தாசில்தார் வசந்தி, நில அளவர்கள் ஆனந்தன், ராஜா, வி.ஏ.ஓ. கணேஷ், உதவியாளர்கள் சிவா, ஐய்யப்பன் உடனிருந்தனர்.
திண்டிவனம்- நகரி அகல ரெயில் பாதை அமைத்து பயண்பாட்டிற்கு வந்தால் தொழில் வளர்ச்சி மற்றும் மக்கள் வாழ்வாதாரம் பெருகும் என்பது குறிப்பிடத்தக்கது.