உள்ளூர் செய்திகள்
நாளை குடியரசு தின விழா-நாமக்கல்லில் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரம்
நாமக்கல்லில் குடியரசு தின விழா முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
நாமக்கல்:
நாட்டின் 73-வது குடியரசு தினம் நாளை (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி. சிங் காலை 8 மணியளவில் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா்.
அதன்பின் தியாகிகளை கெளரவிக்கிறாா். சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, அரசுத்துறை அதிகாரிகளுக்கு, பணியாளா்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்குகிறாா். மேலும், பல்வேறு துறைகள் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளன.
விழாவையொட்டி, மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மேடை அமைப்பு, கொடிக்கம்பம் நிறுவுதல், வண்ணக் கொடிகளை பறக்க விடுதல், அதிகாரிகள் அமரும் வகையிலான கூடங்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் காவல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் இளங்கோவன் பணிகளை நேரில் பாா்வையிட்டாா். மாவட்ட கலெக்டர் அலுவலகம் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.