உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ்

ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறிய விஜய நல்லதம்பிக்கு கொரோனா

Published On 2022-01-25 09:00 GMT   |   Update On 2022-01-25 09:00 GMT
ராஜேந்திர பாலாஜி மீது புகார் கூறிய விஜய நல்லதம்பிக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
விருதுநகர்:

ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜய நல்ல தம்பி புகார் கூறினார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் விஜய நல்லதம்பியை கட்சியை விட்டு நீக்குவதாக அ.தி.மு.க. தலைமை அறிவித்தது. மேலும் அவர் மூலமே பணம் கொடுக்கப்பட்டதாக பலரும் புகார் தெரிவித்தனர். இதன் பேரில் விஜய நல்லதம்பி மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

அதன் பிறகு தனிப்படை போலீசார் கர்நாடகா மாநிலம் ஹாசனில் ராஜேந்திர பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவர் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த விஜய நல்லதம்பியை கோவில்பட்டி அருகே போலீசார் பிடித்தனர். அவரை விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

அதன் பிறகு தினமும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என அறிவுறுத்திய போலீசார் அவரை விடுவித்தனர். அதன்படி விஜய நல்லதம்பி தினமும் குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி வந்தார்.

இந்த நிலையில் விசாரணை நடத்தி வந்த குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கணேஷ்தாஸ், சப்-இன்ஸ்பெக்டர் சந்தான கார்த்திகா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த நிலையில் விஜய நல்லதம்பிக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இதனால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Tags:    

Similar News