உள்ளூர் செய்திகள்
சென்ட்ரல் ரெயில் நிலையம்

பயணிகள் வசதிக்காக சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் பூங்கா அமைப்பு பணி தீவிரம்

Published On 2022-01-22 09:53 GMT   |   Update On 2022-01-22 09:53 GMT
சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் நடைபாதை வசதி, பயணிகள் அமர நிழற்குடை, இருக்கை வசதி அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
சென்னை:

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகள் வசதிக்காக அழகிய பூங்கா அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் எதிரே 380 கோடி ரூபாய் செலவில், ‘சென்ட்ரல் சதுக்கம்‘ கட்டுமான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

‘சென்ட்ரல் சதுக்கம்‘ கட்டும் இடத்தை தவிர, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை, விக்டோரியா ஹால், எம்.ஜி.ஆர், சென்ட்ரல் மெட்ரோ நிலையம், மூர்மார்க்கெட் ரெயில் நிலையம், எம்.ஜி.ஆர்.சென்ட்ரல் எக்ஸ்பிரஸ் நிலையங்களுக்கு இடையே, அழகிய பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

சென்ட்ரலில் வடக்கு பக்கத்தில் காலி இடங்களில் அழகிய பூங்கா அமைக்கப்படுகிறது. இதன் வழியாக, அனைத்து நிலையங்களுக்கும் பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் நடைபாதைகளும், நிழல் குடைகளும், அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. அங்கு பயணிகள் அமர பளிங்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள தரையை அழகுபடுத்தி பூஞ்செடிகள் வளர்த்து பூங்கா அழகுபடுத்தும் பணிகள் நடக்கிறது. கிரானைட் கற்கள் பதிப்பு, கண்ணாடி சுவர்கள் நிறுவப்பட்டு வருகின்றன. பூங்கா பணிகள் விரைவுப்படுத்தப்பட்டு இம்மாத இறுதியில் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது.

இதற்காக சென்ட்ரல் வளாகத்தில் நடைபாதை வசதி, பயணிகள் அமர நிழற்குடை, இருக்கை வசதி அமைப்பு பணிகள் தீவிரமாக நடந்துவருகிறது. இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நீண்ட தூர பயணம் செல்பவர்கள் மற்றும் புறநகர் ரெயில் பயணத்திற்காக சென்ட்ரல் ரெயில் நிலையம் வருபவர்கள் சென்ட்ரல் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் மற்றும் புல் வெளிகளில் சிறிதுநேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாம்.

அதன் பின் பயணிகள் பயணத்தை தொடரலாம். சென்ட்ரல் ரெயில் நிலைய முன்பகுதி மற்றும் மூர் மார்க்கெட் வளாக பகுதியில் பூங்கா அமைப்பு பணிகள் இந்த மாத இறுதியில் முடிவடையும். அதன்பின் பயணிகள் பயன்பாட்டுக்கு பூங்கா திறந்து வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News