உள்ளூர் செய்திகள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் மேம்படுத்த மானியத்துடன் கடன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் மேம்படுத்த மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீவெங்கட பிரியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:&
தாட்கோ மூலம் ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினருக்கு நிலம் வாங்குவதற்கும், நிலத்தை மேம்படுத்தவும், வங்கியுடன் இணைந்து, மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்படுகிறது. ஆண்டு வருவாய் இரண்டு லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். வயது 18 முதல் 65- வயதுக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தில் அதிக பட்சம் 2.50 ஏக்கர் நஞ்சை அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம். ஆதி திராவிடர், பழங்குடியினர் அல்லாதோரிடமிருந்து நிலம் வாங்கப்பட வேண்டும். பத்திரப்பதிவு கட்டணத்தை அரசு தள்ளுபடி செய்துள்ளது. நிலம் வாங்கும் மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம் ரூபாய் வரை) மானிய தொகையாகவும், மீதி தொகை வங்கி மூலம் கடனாக வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் விவசாயிகளுக்கு நில வளத்தை மேம்படுத்துதல், ஆழ்துளை கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்தல், பம்பு செட் அமைப்பதற்காக மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம் ரூபாய் வரை) மானியமாகவும், மீதத் தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.
ஆதிதிராவிட இளைஞர்களுக்கான சிறப்பு சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மருத்துவம், பல் மருத்துவம் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா ஆகிய படிப்புகளில் பட்டம் பெற்றவர்கள், சொந்தமாக மருத்துவ சிகிச்சை, ஆய்வகம், மருந்தகம் அமைப்பதற்கு மொத்த முதலீட்டில் 30 சதவீதம் (2.25 லட்சம் ரூபாய் வரை) மானியமாகவும், மீதத் தொகை வங்கி கடனாக வழங்கப்படும்.
மேலும், முடநீக்கு வல்லுநர், மருந்தாளுநர், கண்ணாடி வினைஞர் மற்றும் ஆய்வகத் தொழில் தொழில்நுட்ப வல் லுநர் முதலிய மருத்துவம் சார்ந்த படிப்புகளில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கு சொந்தமாக மருத்துவ சிகிச்சை மையம், கண் கண்ணாடி கடை, ஆய்வகம், மருந்தகம் அமைப்பதற்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பவர்கள் உரிய மன்றத்தில் பதிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
மேலும், விவரங்களை தாட்கோ மாவட்ட மேலாளர், பெரம்பலூர் அலுவலகத்திற்கு சென்ற தெரிந்து கொள்ளலாம். உங்களுடைய விண்ணப்பத்தினை இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.