உள்ளூர் செய்திகள்
போலீசார் விசாரணை

தருமபுரி தொழிலாளியை கத்தியால் குத்திய வடமாநில வாலிபர்கள்- போலீசார் விசாரணை

Published On 2022-01-19 06:05 GMT   |   Update On 2022-01-19 06:05 GMT
தருமபுரி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டி வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர்:

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கிருஷ்ணன் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த குமார் (வயது 32),

கட்டிட தொழிலாளியான இவர் ஓசூர் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வருகிறார்.

மது குடிக்கும் பழக்கம் உடைய வசந்த குமார் நேற்று இரவு கர்நாடக மாநில எல்லையான பள்ளூர் பகுதியில் உள்ள ஒரு மதுபான கடைக்கு மது அருந்த சென்றுள்ளார். இதையடுத்து அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் வசந்தகுமார் அங்கு தள்ளாடியப்படி நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வடமாநில வாலிபர்கள் சிலர் வந்துள்ளனர். அவர்கள், போதையில் நின்ற வசந்தகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

அப்போது வசந்த குமார் அவர்களுக்கு பணம் கொடுக்க மறுத்து திட்டியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த வடமாநில வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியால் வசந்த குமாரை சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் வயிறு, கண் ஆகிய பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து வடமாநில வாலிபர்கள், அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

காயமடைந்த வசந்தகுமார் மது போதையிலேயே தமிழக எல்லைக்கு நடந்து வந்தார். தொடர்ந்து அவரால் நடக்க முடியாமல் தமிழக எல்லைப்பகுதியில் மயங்கி கீழே விழுந்தார். தொடர்ந்து இரவு முழுவதும் அதே இடத்தில் கிடந்துள்ளார்.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் வசந்தகுமார் கத்திக்குத்து காயத்துடன் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்து அதில் அவரை ஏற்றி சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓசூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டி வடமாநில வாலிபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News