உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு

Published On 2022-01-18 16:38 IST   |   Update On 2022-01-18 16:38:00 IST
சாலை மறியலில் ஈடுபட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சங்கராபுரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது23). இவர் அதே பகுதியில் உள்ள கூட்டுறவு பால் பூத்தில் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று ரமேஷ் பால்கேன்களை மினி லாரியில் ஏற்றி கொண்டிருந்தார். அப்போது அங்கு இடையூறாக நின்ற அதே ஊரைச் சேர்ந்த சிரஞ்சீவி உள்ளிட்ட நபர்களை சற்று தள்ளி நிற்குமாறு ரமேஷ் கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரமேஷை தாக்கினார். இதை விலக்க வந்த ரமேஷின் அண்ணி சூர்யாவையும் அந்த கும்பல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து இந்த சம்பவத்தை கண்டித்து ரமேஷின் ஆதரவாளர்கள் செல்லம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சங்கராபுரம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News