உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஆசிரியர் வீட்டில் கொள்ளை

Published On 2022-01-18 15:23 IST   |   Update On 2022-01-18 15:23:00 IST
அரக்கோணத்தில் பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அரக்கோணம்:

 அரக்கோணம் அடுத்த அம்மனூர் ஸ்ரீனிவாச நகர் 2வது தெருவை சேர்ந்த தொல்காப்பியன்(34). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். 

இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி கடந்த 15-ந் தேதி அதே பகுதியில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றார்.

பின்னர் நேற்று காலை வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே    உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது  7 பவுன் தங்க நகை,  வெள்ளி கொலுசு மற்றும் ரூ.10 ஆயிரம் திருட போனது தெரியவந்தது. 

மேலும், இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Similar News