உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கள்ளக்காதலை கைவிட மறுத்த தொழிலாளிக்கு கத்திக்குத்து

Update: 2022-01-18 09:29 GMT
பி.என். ரோடு பகுதியில் சதீஷ்குமார் நின்றபோது, அங்கு வந்த தினேஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரின் கை மற்றும் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது.
திருப்பூர்:

திருப்பூர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

இவருக்கும், திருப்பூரை சேர்ந்த கவிதா என்ற பெண்ணுக்கும் கள்ளக்காதல் இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் தெரிந்ததும் கவிதாவின் மகன் தினேஷ்குமார்(21) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று மீண்டும் சதீஷ்குமார் கவிதாவின் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனை அவரது மகன் தினேஷ்குமார் கடுமையாக கண்டித்ததோடு தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். 

இந்தநிலையில் பி.என். ரோடு பகுதியில் சதீஷ்குமார் நின்றபோது, அங்கு வந்த தினேஷ்குமார், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சதீஷ்குமாரின் கை மற்றும் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது.

இதில் அவர் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் சதீஷ்குமாரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அளித்த புகாரின்பேரில் தினேஷ்குமாரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News