உள்ளூர் செய்திகள்
மூன்று பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே குளிக்க சென்ற 3 பெண்கள் தண்ணீரில் மூழ்கி பலியானார்கள்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா இனாம் அகரம் கிராமத்தின் வழியாக கல்லாறு தடுப்பணை செல்கிறது. இதில் அதே கிராமத்தை சேர்ந்த பத்மா (40), ரேணுகா (20), சௌந்தர்யா (18) மற்றும் ராதிகா (25) ஆகிய நான்கு பெண்களும் குளிக்க சென்றனர்.
முதலில் குளிக்க உள்ளே இறங்கிய பத்மா ஆழமான பகுதிக்கு சென்றபோது நீச்சல் தெரியாமல் மூழ்கினார்.
அவரை காப்பாற்ற முயன்ற ரேணுகா, சௌந்தர்யா, ராதிகா ஆகியோரும் அடுத்தடுத்து தடுப்பணையில் மூழ்கி கொண்டிருந்த நிலையில் இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்றினர்.
இதில் ராதிகாவை மட்டுமே மீட்கமுடிந்தது. மற்ற 3 பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
தகவலறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற வி.களத்தூர் போலீசார், இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் காப்பற்றப்பட்ட ராதிகா பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து வி.களத்தூர் காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஒரே கிராமத்தை சேர்ந்த 3 பெண்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் அக்கிராம மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.