சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கராபுரம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 40 பேர் மீது வழக்கு
பதிவு: ஜனவரி 17, 2022 16:51 IST
வழக்கு பதிவு
சங்கராபுரம்:
சங்கராபுரம் அருகே உள்ள ச.செல்லம்பட்டு கிராமத்தில் உள்ள கூட்டுறவு பால் பூத்தில் அதே பகுதியை சேர்ந்த பட்டாபிராமன் மகன் ரமேஷ்(வயது 23) வேலை பார்த்து வந்தார். இவர் சம்பத்தன்று மாலை பணியில் இருந்தபோது பால்கேன் ஏற்ற மினி லாரிக்கு இடையூறாக நின்ற அதே ஊரைச் சேர்ந்தவர்களை சற்று தள்ளி நிற்குமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அதே ஊரை சேர்ந்த சிரஞ்சீவி தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து ரமேசையும், விலக்க வந்த இவரது அண்ணி சூர்யாவையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதை கண்டித்து ரமேசின் ஆதரவாளர்கள் செல்லம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். இந்த நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட ச.செல்லம்பட்டு கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 40 பேர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.