உள்ளூர் செய்திகள்
ஓசூரில் ரோஜாமலர்கள் விலை கடும் வீழ்ச்சி

கொரோனா ஊரடங்கு எதிரொலி: ஓசூரில் ரோஜாமலர்கள் விலை கடும் வீழ்ச்சி - உற்பத்தியாளர்கள் வேதனை

Published On 2022-01-17 10:58 GMT   |   Update On 2022-01-17 10:58 GMT
கொரோனா ஊரடங்கு எதிரொலியால் ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் ரோஜா மலர்கள் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், மலர் உற்பத்தியாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் திறந்தவெளி மற்றும் பசுமைக்குடில்கள் மூலம் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ரோஜாமலர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தியாகும் உலகத்தரம் வாய்ந்த ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர் தினம் உள்ளிட்ட முக்கிய பண்டிகை கொண்டாட்டங்களுக்காக பல்வேறு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், உள்நாட்டு சந்தைக்கும் அனுப்பப்படுகிறது.

கடந்த 2020 மற்றும் 2021 ஆகிய 2 ஆண்டுகளில் கொரோனா பரவல் காரணமாக ரோஜா வர்த்தகம் கடுமையாக பாதிக் கப்பட்டது. முழு ஊரடங்கால் ஓசூர் பகுதிகளிலிருந்து ரோஜாமலர்கள் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகாமல் தேக்கமடைந்து குப்பைகளில் கொட்டப்பட்டு விவசாயிகளுக்கு பலகோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த விவசாயிகளுக்கு கடந்த சில மாதமாகவே ரோஜா மலர்களுக்கு நல்ல விலை கிடைத்து வந்தது.

ஓசூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டு வரும் ரோஜா மலர்களுக்கு, 12 பூக்கள் கொண்ட ஒரு கட்டு ரோஜா மலர்கள் 500 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதனால் மலர் உற்பத்தியாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கொரோனா காலத்தில் இழந்த நஷ்டத்தை விவசாயிகள் மீட்டெடுத்தனர். தற்போது மீண்டும் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஓசூர் பகுதியில் ரோஜா மலர்களின் விலை மீண்டும் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது.

500 முதல் 600 ரூபாய்க்கு விற்பனையான ரோஜா மலர்கள், தற்போது ஊரடங்கால் 50 முதல் 60 ரூபாய் வரை என 10 மடங்கு விலை வீழ்ச்சியடைந்து விற்பனையாகிறது. கடந்த ஒரு வார காலமாக இந்த விலை உள்ளது.

இதுகுறித்து ஓசூர் பகுதி மலர் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் கூறும்போது, ‘‘2 ஆண்டுகளாக சரியான விலை இல்லாமல் நஷ்டத்தில் இருந்த நாங்கள், இப்போது தான் நோய்களில் இருந்து செடிகளை காப்பாற்றி நல்ல மகசூல் கிடைக்க செய்துள்ளோம். வருகிற பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதற்காக மலர்களை தயார் செய்து வருகிறோம், கொரோனா நோய் தொற்று அதிகரித்தால், காதலர் தினமும் எங்களுக்கு கை கொடுக்காது என தெரிவித்தனர்.
Tags:    

Similar News