உள்ளூர் செய்திகள்
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பயிலும் மாணவ-மாணவிகள்.

சேலம் மாவட்டத்தில் 4369 மையங்களில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி

Published On 2022-01-17 15:26 IST   |   Update On 2022-01-17 15:26:00 IST
சேலம் மாவட்டத்தில் 4369 மையங்களில் 70 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு இல்லம் தேடி கல்வி திட்டத்தை அரசு அரசு தொடங்கி உள்ளது
சேலம்:
கொரோனா  பரவல் காரணமாக அரசு பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை சரிசெய்யும் பொருட்டு தன்னார்வலர்களைக் கொண்டு  “இல்லம் தேடிக் கல்வி” திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.
 
சேலம் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி முதல் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கப்பட்டது.  மாவட்டத்தில் தற்பொழுது 4,369 மையங்களில் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்" தொடங்கப்பட்டுள்ளது. இதில் 2,339 தொடக்க நிலை மையங்களும், 2,030 உயர் தொடக்க நிலை மையங்களும் அடங்கும்.

இந்த மையங்களில் 4,369 பேர் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் 38,774 தொடக்க நிலை மாணவ, மாணவியர்கள், 31,365 உயர் தொடக்க நிலை மாணவ, மாணவியர்கள் என மொத்தம்  70,139 மாணவ, மாணவியர்கள் இம்மையங்களில்  கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.

 6 மாத காலத்திற்கு தினசரி குறைந்த பட்சம் ஒன்று  முதல் ஒன்றரை மணி நேரம் மாலை நேரங்களில் தன்னார்வலர்களைக் கொண்டு மாணவ, மாணவியர்களின் குடியிருப்புப் பகுதிகளிலேயே எளிய முறையில் கற்றல் வாய்ப்புகளை வழங்கி, அன்றாட கற்றல் செயல்பாடுகளில் படிப்படியாக பங்கேற்கச் செய்தலே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

Similar News