உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் பொருட்களால் ஆபத்து

Published On 2022-01-17 09:51 GMT   |   Update On 2022-01-17 09:51 GMT
மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக் பொருட்களால் ஆபத்து என திருவாரூரில் நடந்த கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திருவாரூர்:

திருவாரூரில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம், கன்சியூமர் சிவிக் ஆக்சன் ஆகியவைகளின் பாதுகாப்பான முறையில் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வது குறித்த இணையவழி கருத்தரங்ம் நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு சி.ஏ.ஜி இயக்குனர் சரோஜா தலைமை வகித்தார். கருத்தரங்கில் சுற்றுச்சூழல் ஆராய்ச்சியாளர்கள் வம்சி, ப்ரித்தி மகேஷ் ஆகியோர் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பற்றி தெரிவித்தனர்.

 கருத்தரங்கில் உலக அளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் துகள்களின் பரவலான ரசாயன மாசுபாடுகள் குறித்து 
எடுத்துக் கூறப்பட்டது. பிளாஸ்டிக் பொருளாதார மற்றும் சமூக அமைப்புகளை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் மாற்றியுள்ளது.

நமது நீர்வழிப்பாதைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் நிரம்பியுள்ளன. விலங்குகளின் வயிற்றிலும் நிரம்பியுள்ளது, ஆனால் மறுசுழற்சி ஒரு தீர்வு என்று பல ஆண்டுகளாக நிறுவனங்களால் கூறப்பட்டு வருகிறது.

 உலகெங்கிலும் உள்ள நாடுகள் பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்வதில் கவனம் செலுத்துகின்றன. இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. 

பிளாஸ்டிக் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் மனித ஆரோக்கியத்திற்கு ஆபத்தானவை என்று அறியப்பட்டுள்ளது. 
உலகளாவிய அளவில் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் 
மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் உயிரினங்களில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நாளமில்லாச் 
சுரப்பியை சீர்குலைக்கும் ரசாயனங்கள் இருந்தது கண்டறியப்பட்டன. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக், பெரும்பாலும் வாளிகள், குடங்கள், குவளைகள், மெல்லிய பிளாஸ்டிக் கொள்கலன்கள் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் கேரி பேக்குகள் போன்ற குறைந்த தரமுள்ள 
பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. 

மறுசுழற்சி செயல் பாட்டின்போது மறுசுழற்சி செய்பவர்களுக்கு 
அத்தகைய பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பதற்கு எந்தத் தகவலும் இல்லை.

மேலும் இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், இதன் சிக்கலைப் பற்றி அறியாத நுகர்வோரால் பயன்படுத்தப்படுகின்றன.

 பிளாஸ்டிக் மாசுபாடு என்பது ஒரு தீராத பிரச்சனையாகும். இது தற்போது அதைச் சமாளிக்கும் திறனை விஞ்சி நிற்கிறது. அதைச் சமாளிக்க, தயாரிப்பாளர்கள், குடிமக்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் நிர்வாக அமைப்புகளின் கூட்டு முயற்சிகள் தேவை.

அத்தகைய முயற்சிகளின் முன்னணியில், அவர்கள் உருவாக்கும் கழிவுகளுக்கு உற்பத்தியாளர்கள் பொறுப்பேற்க வேண்டும். 

தொழில்நுட்ப ரீதியாக கடுமையான வரம்புகள் மேற்கொள்ளப்பட 
வேண்டும். இவ்வாறு கருத்தரங்கில் எடுத்துக் கூறப்பட்டது.

கருத்தரங்கில் நுகர்வோர் அமைப்பின் தலைவர் அண்ணாதுரை, 
பொதுச் செயலாளர் ரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் 
திருநாவுக்கரசு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், நுகர்வோர் அமைப்பு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆராய்ச்சியாளர் 
சுமனா வரவேற்று முடிவில் நன்றி கூறினார்.
Tags:    

Similar News