உள்ளூர் செய்திகள்
கோவில்

கோவையில் வழிபாட்டு தலங்கள் மூடல்- கோவில் வாசலில் நின்று தரிசித்த பக்தர்கள்

Published On 2022-01-17 15:12 IST   |   Update On 2022-01-17 15:12:00 IST
கடந்த 4 நாட்ளுக்கும் மேலாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன.
கோவை:

கொரோனா 3-வது அலை பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்கள் வழிபாட்டு தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.  அதன்படி கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் முதல் வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டன. இந்தநிலையில் 2-வது வாரமாக கடந்த 13-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் மூடப்பட்டன.

பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூச நாட்களில்  வழக்கமாக பொதுமக்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். ஆனால் கட்டுப்பாடு காரணமாக கடந்த 4 நாட்களாக கோவில்களுக்கு பக்தர்கள் செல்ல முடியவில்லை. மருதமலை முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வருவது வழக்கம். தற்போது கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்கு வர பக்தர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

வெள்ளி, சனி, ஞாயிறு 3 நாட்கள் தான் கோவில்கள் பூட்டப்பட்டிருக்கும். இன்று கோவில் திறந்திருக்கும் என காலையில் இருந்தே மருதமலை முருகன் கோவிலுக்கு பக்தர்கள் வந்தனர்.ஆனால் இன்றும் கோவில் மூடப்பட்டிருந்ததால் அவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். பக்தர்கள் மலையடிவாரத்திலேயே கற்பூரம் ஏற்றி சாமியை தரிசனம் செய்து விட்டு திரும்பி சென்றனர்.

இதேபோல் கோவை மாநகரில் உள்ள தண்டுமாரியம்மன், கோனியம்மன் கோவில், ராம்நகர் ராமர் கோவில், புலியகுளம் விநாயகர் கோவில், ஈச்சனாரி விநாயகர் கோவில் உள்பட அனைத்து கோவில்களும் மூடப்பட்டிருந்தது. இதனால் பக்தர்கள் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து விட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பொங்கல் மற்றும் தைப்பூச பண்டிகை நாட்களில் நேரடி சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படாததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் ஊரகப்பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களுக்கு மட்டும் பக்தர்கள் நேரில் சென்று வழிபட்டனர். அங்கும் கொரோனா வழிமுறையை பின்பற்றி முக கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டது. பக்தர்களுக்கு அனுமதி இல்லாவிட்டாலும் கோவில்களில் வழக்கம்போல் பூஜைகள் நடந்தன.

இதேபோல் நஞ்சப்பா சாலையில் உள்ள கிறிஸ்து அரசர் ஆலயம், ஒப்பணக்கார வீதி பள்ளிவாசல் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தது.

Similar News