உள்ளூர் செய்திகள்
சிறுத்தை

மஞ்சூரில் தேயிலை தோட்டத்தில் சுற்றிய சிறுத்தை

Published On 2022-01-17 08:48 GMT   |   Update On 2022-01-17 08:48 GMT
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சிறுத்தையை பார்த்து அலறி ஓட்டம் பிடித்தனர்.
மஞ்சூர்:

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே குந்தாபாலம் பழைய பெட்ரோல் பங்க் பகுதியை சுற்றிலும் தேயிலை தோட்டங்கள் அதிகளவில் உள்ளன. சம்பவத்தன்று பெண் தொழிலாளர்கள் சிலர் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 அப்போது சற்று தொலைவில் தேயிலை தோட்டத்தின் நடுவே இருந்த பாறை ஒன்றில் விலங்கு ஒன்று படுத்திருந்ததை தொழிலாளி ஒருவர் பார்த்துள்ளார். இதுகுறித்து அவர் அருகில் இருந்த சக தொழிலாளர்களிடம் கூறினார்.

இதைத்தொடர்ந்து அனைவரும் அந்த விலங்கு என்ன விலங்கு? என  தூரத்தில் நின்று பார்த்துள்ளனர். அப்போது அது சிறுத்தை என தெரியவந்தது. அது  பாறையில் படுத்தபடி ஓய்வெடுத்து கொண்டிருந்தது. 

இதனால் பீதி அடைந்த தொழிலாளர்கள் இலை பறிப்பதை கைவிட்டு உடனடியாக தோட்டத்திலிருந்து வெளியேறி சாலைக்கு ஓடிச் சென்றனர். இந்நிலையில் சுமார் 15 நிமிடங்கள் ஓய்வெடுத்த சிறுத்தை மெதுவாக எழுந்து நின்றது. தொடர்ந்து பாறையில் இருந்து தோட்டத்திற்குள் இறங்கி தேயிலை செடிகளுக்கிடையே சென்று மறைந்தது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News