உள்ளூர் செய்திகள்
சிமெண்டு ஆலையின் முன்னாள் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர்:
கடலூர் மாவட்டம், திட்டக்குடி தாலுகா, பெண்ணாடம் பெரிய அம்பிகாபுரத்தை சேர்ந்தவர் கொளஞ்சி (வயது 40). இவருக்கு ரம்யா என்ற மனைவியும், 8 வயதில் அஸ்வந்த் என்ற மகனும் உள்ளனர். கொளஞ்சி அரியலூரில் உள்ள தனியார் சிமெண்டு ஆலையில் போக்குவரத்து மேலாளராக பணிபுரிந்து வந்தார்.
வேலைக்கு சென்று வருவதற்காக கடந்த 2 ஆண்டுகளாகவே குடும்பத்தினருடன் பெரம்பலூர் அருகே துறைமங்கலம் நியூ காலனி வடக்கு தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ரம்யா துபாய் அபுதாபியில் கடந்த ஒரு ஆண்டாக நர்சாக பணிபுரிந்து வருவதால் கொளஞ்சி வேலைக்கு செல்லாமல் மகன் அஸ்வந்த்தை கவனித்து கொண்டு வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரம்யாவின் தாய் துறைமங்கலத்திற்கு வந்து தனது பேரன் அஸ்வந்த்தை பொங்கல் பண்டிகை கொண்டாட தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பச்சலநாயக்கன் பட்டிக்கு அழைத்து சென்று விட்டார். இதனால் கொளஞ்சி மட்டும் வீட்டில் தனியார் இருந்து வந்தார்.
சம்பவத்தன்று காலையில் கொளஞ்சியை பார்க்க அவரது நண்பர் ஒருவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டின் உள்ளே மின்விசிறி கொக்கியில் சேலையால் கொளஞ்சி தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொளஞ்சியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்