உள்ளூர் செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள்.

கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களில் திருட்டு மது விற்றதாக 93 பேர் மீது வழக்கு

Published On 2022-01-17 13:00 IST   |   Update On 2022-01-17 13:00:00 IST
கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்களில் திருட்டு மது விற்றதாக 93 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நாகர்கோவில்:

திருவள்ளுவர் தினம் மற்றும் முழு ஊரடங்கையொட்டி  அடுத்தடுத்து 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை ஆகும்.

டாஸ்மாக் விடுமுறை நாட்களில்  அனுமதியின்றி அதிக விலைக்கு திருட்டு மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தது. இதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார் கடந்த 2 நாட்களாக அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த 2 நாட்களில் மட்டும் 75 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 750-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நேற்றும் மாவட்டம்முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையிலான போலீசார் கல்லுக்கட்டி பகுதியில் உள்ள தனியார் பாரில் மது பானங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு மது விற்று கொண்டிருந்த மீனாட்சிபுரம் பகுதியை சேர்ந்த சுஜின் என்பவரை கைது செய்தனர். அங்கிருந்த 666 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து ராஜாக்க மங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். குலசேகரம் பகுதியில் சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 123 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

 918 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 3 நாட்களில் திருட்டு மது விற்பனை செய்வதாக 93 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

Similar News