உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

சில்லக்குடியில் நாளை நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதி ரத்து

Published On 2022-01-16 13:09 IST   |   Update On 2022-01-16 13:09:00 IST
பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் சில்லக்குடியில் நாளை (திங்கட்கிழமை) நடைபெற இருந்த ஜல்லிக்கட்டுக்கு அனுமதியை மாவட்ட நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சில்லக்குடி கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டியும், மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.   

இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி நாளை (திங்கட்கிழமை) நடைபெறுவதாக இருந்தது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கிராம மக்களும், ஜல்லிக்கட்டு பேரவையும் மும்முரமாக செய்து வந்தனர்.

இந்த நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஜல்லிக்கட்டு நடத்தினால் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், சில்லக்குடியில் நாளை ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அனுமதியை மாவட்ட நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்தது.

இதையடுத்து, அனுமதி ரத்து செய்யப்பட்ட தகவலை தாசில்தார் மூலம் சில்லக்குடி கிராம மக்களுக்கும், ஜல்லிக்கட்டு பேரவைக்கும் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு நடத்த முன்னேற்பாடு பணிகளை செய்து வந்த சில்லக்குடி கிராம மக்கள் கவலை அடைந்தனர்.

மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்தவுடன் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.

ஏற்கனவே கடந்த ஆண்டு சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி, பின்னர் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை காரணம் காட்டி மாவட்ட நிர்வாகம் அனுமதியை ரத்து செய்ததை கண்டித்து கிராம மக்கள் தங்களுடைய வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News