உள்ளூர் செய்திகள்
பணம் மோசடி

ஆசிரியையிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.38 ஆயிரம் மோசடி- வாலிபர் துணிகரம்

Published On 2022-01-13 15:19 IST   |   Update On 2022-01-13 15:19:00 IST
பொன்னேரியில் ஆசிரியையிடம் ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்து ரூ.38 ஆயிரம் பணத்தை மோசடி செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பொன்னேரி:

எர்ணாவூரை சேர்ந்தவர் மரிய ஜெயபாமா. மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டில் உள்ள ஆரம்ப பள்ளியில் ஆசிரியை வேலை பார்த்து வருகிறார்.

இவர் பொன்னேரியில் உள்ள வங்கியில் நகைகளை அடகு வைத்து இருந்தார். அதை மீட்பதற்கு தனது ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் எடுப்பதற்காக பின் நம்பர் மாற்றம் செய்ய அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அருகில் இருந்த வாலிபரிடம் ஏ.டி.எம். கார்டின் பின் நம்பரை மாற்ற உதவி கேட்டார்.

சிறிது நேரம் கழித்து பின் நம்பர் மாற்றிவிட்டதாக கூறி அந்த வாலிபர் மரியஜெயபாமாவிடம் ஏ.டி.எம். கார்டை கொடுத்து சென்று விட்டார். பின்னர் சிறிது நேரத்தில் வங்கி கணக்கில் இருந்து ரூ.38 ஆயிரம் எடுக்கப்பட்டு இருப்பதாக மரிய ஜெயபாமாவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வங்கியை தொடர்பு கொண்டு தனது சேமிப்பு கணக்கை முடக்கினார். இதனால் அதிலிருந்த பணம் தப்பியது. ஏ.டி.எம். பின் நம்பரை மாற்ற உதவி செய்ததாக கூறி மர்ம வாலிபர் கார்டை மாற்றிக் கொடுத்து நூதன முறையில் பணத்தை சுருட்டி இருப்பது தெரிந்தது.

இது குறித்து மரிய ஜெயபாமா திருவள்ளூர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News