உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

உன்னை நீயே பாதுகாத்துக்கொள் - பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு

Published On 2022-01-13 10:53 IST   |   Update On 2022-01-13 10:53:00 IST
பள்ளி நேரத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய முடிகிறது. ஆனால் பள்ளி முடிந்து வீடும் திரும்பும் மாணவர்களை கண்காணிக்க முடிவதில்லை.
உடுமலை:

உடுமலை கல்வி மாவட்டத்தில் 38 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது.

தற்போது கொரோனா பரவல் அதிகரித்தும் வரும் சூழலில் பள்ளிகளில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. அவ்வகையில் அவ்வப்போது இருக்கைகள், மேஜை உள்ளிட்ட தளவாடப்பொருட்கள், கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்படுகின்றன. 

குறிப்பாக மாணவர்கள் முகக்கவசம் அணிந்திருப்பதை உறுதி செய்த பின்னரே பள்ளிக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். சமூக இடைவெளியைப்பின்பற்றும் வகையில் ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் நிலையில் பிற மாணவர்கள் வளாகத்திற்குள் உள்ள மரத்தடியில் அமர வைக்கப்படுகின்றனர்.

அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவவும் அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் நோய்த்தடுப்பு வழிமுறைகளை புறக்கணித்து விடுகின்றனர். முகக்கவசம் அணிவதை தவிர்த்தும், சக நண்பர்களின் தோளில் கை போட்டவாறும், ‘ஹாயாக’ செல்கின்றனர்.

இதனால் பல பள்ளிகளில், அந்த வகுப்புகளின் காலை இறைவணத்தின் போது ‘உன்னை நீயே பாதுகாத்துக்கொள்’ என விழிப்புணர்வு உரை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து பள்ளித்தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பள்ளி நேரத்தில் மாணவர்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய முடிகிறது. ஆனால் பள்ளி முடிந்து வீடும் திரும்பும் மாணவர்களை கண்காணிக்க முடிவதில்லை.

இதனால் நோயின் பாதிப்பு, அதனால் ஏற்படும் பின் விளைவுகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொருவரும் அரசு வழிகாட்டுதல்களை பின்பற்றினால் நோய்ப்பரவல் இருக்காது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News