உள்ளூர் செய்திகள்
சிவகாசி மாநகராட்சி

சிவகாசி மாநகராட்சி மேயர் பதவி பெண்ணுக்கு ஒதுக்கீடா?

Published On 2022-01-11 04:43 GMT   |   Update On 2022-01-11 04:43 GMT
சிவகாசி மாநகராட்சி பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.
சிவகாசி:

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் தற்போது அருகில் இருந்த திருத்தங்கல் நகராட்சியை சிவகாசியோடு இணைத்து புதிய மாநகராட்சி தொடங்கப்பட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை அதிகாரிகள் 48 வார்டுகளாக பிரித்துள்ளனர். இதில் திருத்தங்கல் பகுதியில் 24 வார்டுகளும், சிவகாசி பகுதியில் 24 வார்டுகளும் உள்ளது.

சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில் ஆதிதிராவிட மக்கள் போட்டியிட வசதியாக 7 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 4 வார்டுகள் பெண்களுக்கும், 3 வார்டுகள் ஆண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 20 வார்டுகள் பொது வார்டுகளாக அறிவிக்கப்பட்டுள் ளது. மேலும் 21 வார்டுகள் பெண்கள் (பொது) என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் உள்ள 48 வார்டுகளில் எந்தெந்த வார்டுகள் யாருக்கு என்ற விவரத்தை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இதுகுறித்து நகராட்சி உயர்அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

அரசின் உத்தரவுப்படி வார்டு பிரிக்கும் பணி நடைபெற்றது. அதில் சில திருத்தம் செய்ய வாய்ப்பு இருக்கிறது. அனைத்து பணிகளும் முடிந்த பின்னர் சிவகாசி மாநகராட்சி வார்டு விவரங்கள் குறித்த தகவல் வெளியாகும் என்றார்.

சிவகாசி மாநகராட்சிக்கு தற்போது தான் முதல் தேர்தல். இந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுபவர் முதல் மேயர் என்ற பெருமை இருக்கும். இந்த நிலையில் சிவகாசி மாநகராட்சி தேர்தல் பணிகளில் அதிகாரிகள் வேகம் காட்டி வருவதை போல் அரசியல் கட்சியினரும் வேகம் காட்டி வருகிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து தனித்தனியே தங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

சிவகாசி மாநகராட்சி பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள அரசியல் கட்சியினர் ஆர்வமாக உள்ளனர்.

விரைவில் இதற்கான அறிவிப்பு வெளிவரும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News