உள்ளூர் செய்திகள்
சேற்று மண்ணுடன் குடிநீர் வினியோகத்தால் மக்கள் அவதி
கறம்பக்குடி அருகே சேற்று மண்ணுடன் குடிநீர் வினியோகிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே கந்தர்வ கோட்டை ஒன்றியம் துவார் ஊராட்சியை சேர்ந்த குளவாய்பட்டி கிராமம் உள்ளது. இங்கு 150&க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவைக்காக 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி செயல்பட்டு வருகிறது. இதில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் கடந்த 10 நாட்களாக சேற்று மண்ணுடன் கலங்கலாக வருகிறது.
இது குறித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே குடிநீர் தொடர்ந்து கலங்கலாக வருவதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்து பாதுகாப்பான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.