உள்ளூர் செய்திகள்
வழக்கு பதிவு

கோவை மாநகரில் ஊரடங்கு தடையை மீறிய 13 பேர் மீது வழக்கு

Published On 2022-01-10 11:22 IST   |   Update On 2022-01-10 11:22:00 IST
கோவை மாநகர போலீசார் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க மாநகரின் முக்கிய சாலைகளில் 45 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வந்தனர்.
கோவை:

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நேற்று தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தேவையில்லாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கடைகளை திறக்கவும் தடை விதிக்கப்பட்டது. மாநகர போலீசார் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களை கண்காணிக்க மாநகரின் முக்கிய சாலைகளில் 45 இடங்களில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வந்தனர். மேலும் போலீசார் ரோந்து வாகனங்களில் ரோந்து சென்றும் கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் ராமநாதபுரம் போலீசார் புலியகுளம் ரெட்பீல்டு ரோட்டில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் சண்முக சவுந்தர்ராஜ் (வயது 40), காஜா நிஜாமுதீன் (31) ஆகியோர் தடையை மீறி கடையை திறந்து வைத்து இருந்தனர். இவர்கள் மீது போலீசார் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சுங்கம் பைபாஸ் ரோட்டில் வெங்கடேஷ் (46) என்பவர் தடை மீறி கடையை திறந்து வைத்து இருந்தார். அவர் மீதும் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிங்காநல்லூர் வரதராஜபுரம் மேட்டில் போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக என்.கே. பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (30), வசந்தகுமார் (22) ஆகியோர் மேட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தனர். இவர்கள் 2 பேர் மீது சிங்காநல்லூர் போலீசார் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல சிங்காநல்லூர் போலீசார் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிள்களில் சுற்றி திரிந்த பெருமாள் கோவில் வீதியை சேர்ந்த பிரபு (27), பீளமேட்டை சேர்ந்த கந்தசாமி (34), வசந்தா நகரை சேர்ந்த விஜய் (24) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பீளமேடு போலீசார் தேவையில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றித்திரிந்த தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்த மகேந்திரபாபு (23), ராமநாதபுரத்தை சேர்ந்த முரளி (23), கோல்டு வின்சை சேர்ந்த அருண்குமார் (26), நெல்லையை சேர்ந்த ராஜா (25) ஆகியோர் மீது தொற்று நோய் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மாநகரில் மட்டும் நேற்று ஒரே நாளில் தடையை மீறி 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Similar News