உள்ளூர் செய்திகள்
நடமாடும் மண்பரிசோதனை விழிப்புணர்வு முகாம் நடைபெற்ற காட்சி.

மண்வள பரிசோதனை முகாம்

Published On 2022-01-09 13:08 IST   |   Update On 2022-01-09 13:08:00 IST
பெரம்பலூர் அருகே விவசாயிகளுக்கான மண் வள பரிசோதனை முகாம் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் வட்டார வேளாண்மை துறை மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம் சார்பில் எளம்பலூரில் மண்வள பரிசோதனை முகாம் மற்றும் விவசாயிகளுக்கான தொழில்நுட்ப பயிற்சி நெல் தரிசில் அதிதீவிர பயறுவகை பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சிகள் நடந்தது.

ஊராட்சி தலைவர் சித்ராதேவி, முன்னாள் ஊராட்சி தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண் துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) கீதா தலைமை வகித்து பேசுகையில், மண்வள மேம்பாடு, மண்வளம் பாதுகாத்தல், மண் பரிசோதனை அவசியம் மற்றும் மண் மாதிரி எடுக்கும் முறை போன்றவற்றை விவசாயிகளுக்கு எடுத்துக்கூறினார்.

மேலும் விவசாயிகள் தங்கள் மண்வளம் குறித்து அறிந்து கொள்ள மண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இதனால் தங்கள் மண் வளத்திற்க்கு ஏற்ப உரமிட்டு கூடுதல் செலவினத்தை தவிர்க்கவும் மண் வளம் பாதுகாக்கவும் இயலும். வேளாண் பெருமக்கள் தங்கள் வயல் மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்ய ரூ.20 செலுத்தி பெரம்பலூர் மண் பரிசோதனை நிலையத்தில் பரிசோதனை செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

பின்னர் நடமாடும் மண்பரிசோதனை விழிப்புணர்வு முகாமினை தொடங்கிவைத்தார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் பேசுகையில், மண் பரிசோதனை அடிப்படையில் தேவையான அளவு உரங்களை மட்டுமே ஆதார் அட்டையுடன் அனுமதி பெற்ற உர விற்பனையாளர் நிலையத்தில் மூட்டையிலுள்ள விலைத் தொகை மிகாமல் ரசீது பெற்று வாங்க வேண்டும் என விவசாயிகளுக்கு அறிவுறுத்தினார்.

பெரம்பலூர் வேளாண்மை உதவி இயக்குநர் ராணி பேசுகையில், விளை நிலங்களில் பசுமை போர்வைத் திட்டத்தின் வாயிலாக இலவச மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 160 கன்றுகள் (தனப்பயிராக), அல்லது 50 கன்றுகள் (வரப்பு பயிராக) வழங்கப்படுவது குறித்து எடுத்துரைத்து பயன்அடையலாம். மேலும் அதிதீவிர பயறுவகை பயிர் சாகுபடி செய்யலாம் என தெரிவித்தார்.

பயிற்சிகளில் பெரம்பலூர் வட்டார வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் பயிர் காப்பீட்டு காப்பீடு அலுவலர்கள் கலந்து கொண்டு உயிர் உரம், நுண்ணூட்ட உரம் பயன்பாடு, அட்மா திட்ட செயல்பாடுகள் மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள திட்டங்களைப் பற்றி விளக்கிக் கூறினர். இந்த பயிற்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களான எசனை, வடக்குமாதேவி, எளம்பலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News