உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

அதிகரித்து வரும் கொரோனா பரவல்

Published On 2022-01-08 12:43 IST   |   Update On 2022-01-08 12:43:00 IST
திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பெரம்பலூர்:

திருச்சி, தஞ்சாவூர், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டிணம், மயிலாடுதுறை, புதுக் கோட்டை  உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா தொற்று மளமளவென உயர்ந்து வருகிறது. 

திருச்சியை  பொறுத்த மட்டில் கடந்த டிசம்பர் 31&ந்தேதி 8 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டது. 

பின்னர் படிப்படியாக உயர்ந்து நேற்றைய தினம் 184 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று 123 பேருக்கு   மட்டுமே  உறுதி செய்யப்பட்டு   இருந்தது. நாளும் தொற்றுகள்  அதிகரித்து வருவதால்  தற்காலிக கொரோனா  சிகிச்சை மையங்களை திறப்பதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை செய்து வருகிறது. 

இந்த மண்டலத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தொற்று மிக குறைந்த அளவிலேயே வந்து கொண்டிருந்தன. பல நாட்கள் தொற்று இல்லாத  மாவட்டங்களாக இருந்தன. ஆனால் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. 

மத்திய மண்டலத்தில் நேற்றைய தினம் மொத்தம் 382 பேருக்கு  தொற்று உறுதியாகியுள்ளது.  தஞ்சாவூரிலும்  தொற்று 100&ஐ நெருங்கியது.  இங்கு நேற்றைய பரிசோதனை முடிவில் 80 பேருக்கும், புதுக்கோட்டை மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களில் தலா 17 பேருக்கும், கரூர், திருவாரூரில் தலா 13 பேருக்கும்,   மயிலாடுதுறையில் 12 பேருக்கும், அரியலூரில் 9 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. 

பொங்கல்  பண்டிகை நெருங்கி வரும் நிலையில் தொற்றுகள் அதிகரித்து வருவது அனைத்து தரப்பினருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

Similar News