உள்ளூர் செய்திகள்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மண் பானை, மண் அடுப்புகள் தயாரிப்பு தீவிரம்
கறம்பக்குடி அருகே பொங்கல் பண்டிகையையொட்டி மண் பானைகள் மற்றும் அடுப்புகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை:
பொங்கல் திருநாள் தமிழ் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உழைப்பின் மேன் மையை உணர்த்தும் நாளாகவும் கொண்டாடப்படுகிறது. நவீன மயமாகிப்போன இந்த காலத்திலும் மண் பானையில் பொங்கல் வைக்கும் வழக்கம் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நடைமுறையில் உள்ளது.
இதனால் பொங்கல் வந் தால் மண் பானை, மண் அடுப்புகளுக்கு தனி மவுசு ஏற்படுவது வழக்கம். புதுக் கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மழையூர், நரங்கிபட்டு, மைலக்கோன்பட்டி பகுதிகளில் மண்பாண்டங்கள் செய்யப்படுகின்றன.இப்பகுதியில் செய்யப்படும் மண்பாண்டங்களுக்கு வெளி மாநிலங்கள் வெளி மாவட்டத்திலும் நல்ல வரவேற்பு உள்ளது.
தொடர் மழையினால் தொழில் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மழை விட்டு உள்ளதால் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். மண் பானைகள், மண் அடுப்புகள், சட்டிகள், ஜாடிகள் என பலவிதமான பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.
பொங்கலுக்கு சில நாட்களே இருப்பதால் கறம்பக்குடி சந்தைகளில் மண் பானை விற்பனை களை கட்டியுள்ளது. வெளியூர் வியாபாரிகளும் கறம்பக்குடி பகுதிகளுக்கு வந்து நேரடியாக மண்பாண்டங்களை விற்பனைக்கு வாங்கி செல்கின்றனர்.
இதுகுறித்து மழையூரை சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளி ஞான பண்டிதர் கூறுகையில், கொரோனா ஊரடங்கு, மழை வெள்ளம் என கடந்த இரண்டு வருடங்களாக மண்பாண்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.
இருப்பினும் பாரம்பரிய தொழிலை விட மனமின்றி கஷ்டமான நிலையிலும் மண்பாண்டங்களை தயாரித்து வருகிறோம். உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடையாது.
தொழில் கூடம் இல்லாததால் மழை காலங்களில் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.நலிவடைந்து வரும் எங்களது தொழிலை அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினால் எங்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ஆண்டு அதிக அளவில் மண்பாண்டங்கள் விற்பனையாவது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார்.