உள்ளூர் செய்திகள்
அமைச்சர் ஐ.பெரியசாமி

51 ஆயிரம் பேரின் பயிர்க்கடன் தள்ளுபடி- சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு

Published On 2022-01-07 07:50 GMT   |   Update On 2022-01-07 07:50 GMT
சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை:

சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:-

கடந்த ஆண்டு (202021) பயிர்க்கடன் வழங்குவதற்கு ரூ.11,000 கோடி குறியீடு நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் பயிர்க்கடன் வழங்குவதற்கு நிர்ணயிக்கப்பட்ட குறியீடு முறையே ரூ.746.00 கோடி மற்றும் ரூ.534.00 கோடி ஆகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எய்தியது ரூ.614.92 மற்றும் ரூ.502.62 கோடி ஆகும்.

மேலும், சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விவசாயிகள் தங்களது சுய உறுதிமொழியில் கூடுதலான பரப்பில் பயிர் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். இந்த விவரங்கள் அடங்களில் உள்ள விவரங்களுக்கு மாறாக உள்ளது.

இது போன்ற விதிமீறல்கள் பிற மாவட்டங்களில் நடைபெற்றிருப்பினும், இவ்வகையான 2 விதிமீறல்களில் 97 சதவீதம் அதாவது மொத்தம் ரூ.516.92 கோடியில் ரூ.501.69 கோடி இவ்விரு மாவட்டங்களில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில், விவசாயிகளுக்கு கடன் வழங்கும் பணியானது, அதிக முக்கியத்துவம் வாய்ந்த பணியாக உள்ளதாலும், விதிகளின்படி கடன் வழங்க வேண்டியது சங்கத்தின் பணி என்பதையும் கருத்தில் கொண்டு இவ்வகையான விதிமீறல்கள் இனி நடைபெறா வண்ணம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதை உறுதி செய்து விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை பரிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்நிகழ்வினை சிறப்பினமாக கருதி மேற்கூறிய விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி சான்றினை வழங்கலாம் எனவும் அவர்களுக்கு மீண்டும் தொடர்ந்து பயிர்க்கடன் வழங்கவும் ஆணையிட்டுள்ளார்கள்.

இதனால் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் உள்ள 51,017 விவசாயிகளுக்கு ரூ.501.69 கோடி அளவிற்கு பயிர்க்கடன் தள்ளுபடி வழங்கப்படும் என்பதையும், அவர்களுக்கு நடப்பாண்டில் மீண்டும் பயிர்க்கடன் வழக்கம்போல தொடர்ந்து வழங்கப்படும் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனி வருங்காலங்களில் இத்தகைய தவறுகள் நிகழாத வண்ணம் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News