உள்ளூர் செய்திகள்
மனநிலை பாதித்து குணமடைந்த நபர் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு
பெரம்பலூரில் மனநிலை பாதிக்கப்பட்டு கருணை இல்லத்தால் மீட்கப்பட்ட நபர் குணமடைந்த நிலையில் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, ரோட்டில் சுற்றித் திரிந்துகொண்டிருந்த நரசிம்மன் (எ) நரசிம்மலு என்பவர் கடந்த 16.03.2016 அன்று வேலா கருணை இல்லத்தின் மூலம் மீட்கப்பட்டார்.
பின்பு மாவட்ட மனநல மருத்துவரின் பரிசோதனை செய்து மருத்துவரின் பரிந்துரையின் அடிப்படையில் கருணை இல்லத்தில் சேர்க்கப்பட்டு, மருத்துவரின் ஆலோசனையின்படி, மனநலத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் சிந்தனை நல்வழிப்படுத்துவதற்கு தொழிற்பயிற்சி விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்பு நரசிம்மன் (எ) நரசிம்மலு அளித்த தகவலின் அடிப்படையில், அவர் வீட்டாருக்கு வேலா கருணை இல்லத்தின் நிர்வாகி அனிதா அருண்குமார் மூலம் ஆந்திர மாநிலம் குண்டூர் காந்திப்பேட்டையில் வசிக்கும் அவரது சகோதரி மஞ்சுளா சாரதா அஜ்சநேயலுக்கு தகவல் அளிக்கப்பட்டது.
பின்னர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா அறிவிப்பின்படி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மியின் முன்னிலையில் தகுந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு அவரின் சகோதரி மற்றும் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.