உள்ளூர் செய்திகள்
முக கவசம்

சென்னை குடிசை பகுதிகளில் 80 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் அலட்சிய போக்கு

Published On 2022-01-05 11:25 GMT   |   Update On 2022-01-05 11:25 GMT
சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை:

கொரோனா மீண்டும் தாக்கத்தொடங்கி இருப்பதால் பொதுமக்கள் அவசியம் முக கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் சென்னையில் பெரும்பாலானவர்கள் முக கவசம் அணியாமல் தொடர்ந்து அலட்சியமாகவே இருக்கிறார்கள் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

கொரோனாவை தடுக்க முக கவசம் மிக முக்கியம் என்பதை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். நேற்று அவர் அண்ணா சாலையில் திடீரென காரில் இருந்து இறங்கி முக கவசம் அணியாதவர்களுக்கு முக கவசம் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

என்றாலும் கூட சென்னை மக்களுக்கு இன்னமும் முக கவசம் மீது ஆர்வம் வரவில்லை. தொடர்ந்து அலட்சியமாகவே இருக்கிறார்கள். குறிப்பாக சென்னையில் குடிசைப் பகுதியில் வசிப்பவர்கள் முக கவசம் அணிவதே இல்லை.

இது தொடர்பாக 7 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் சராசரியாக 65 முதல் 70 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் இருப்பது தெரியவந்தது. சென்னை குடிசைப்பகுதியில் வசிப்பவர்கள் சராசரியாக 80 சதவீதம் பேர் முக கவசம் அணியாமல் உள்ளனர்.

முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பதை தீவிரப்படுத்தும் படி உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் இதுவரை தமிழகம் முழுவதும் 105 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் மட்டும் 1022 பேரிடம் இருந்து ரூ.2.55 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அபராதம் விதிப்பது மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் கொரோனா விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்கள் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் தீவிர கொரோனா தடுப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது முக கவசம் அணியாமல் சென்ற 3093 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வகையில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து 6 லட்சத்து 18 ஆயிரத்து 600 ரூபாயை சென்னை மாநகர போலீசார் வசூலித்து உள்ளனர்.

கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து, கட்டாயம் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், ஒமைக்ரான் கொரோனா தொற்று பரவல் ஏற்படாத வண்ணம் ஒத்துழைக்குமாறு பொதுமக்களிடம் சென்னை பெருநகர காவல் துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இந்த சிறப்பு குழுக்களின் தணிக்கை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
Tags:    

Similar News