உள்ளூர் செய்திகள்
கீரனூர் அருகே ரெயில் மோதிய விபத்தில் காய்கறி வியாபாரி பலியானார்.
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பகுதியை சேர்ந்தவர் யூசுப் (வயது 58). இவர் கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாடுகளில் வேலை பார்த்து வந்தார். பின்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கிருந்து தாயகம் திரும்பிய அவர் வீட்டின் அருகாமையில் காய்கறி வியாபாரம் செய்து வந்தார்.
இதற்கிடையே கடந்த 4 ஆண்டுகளாக மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு யூசுப் பல ஆஸ்பத்திரிகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் கொடுமையில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை.
இந்த நிலையில் கீரனூரில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு யூசுப் பரிதாபமாக இறந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தீராத மூட்டு வலியால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. திருச்சி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.